Thursday, January 20, 2011

எனக்கு பிடித்தவை……


எனக்கு பிடித்தவை……

வாழ்க்கை என்பது ஓர் தொடர் பயணம் அல்ல, இன்று இப்போது இந்தக் கணம் வாழ்வதுதான் நிஐம்.

பயம், அதிருப்தி, வெறுப்பு, நோய், வலி, பாதுகாப்பின்மை, பொருளாதார தாக்கம் போன்றவை இன்னும் என்னைத் தொடராததால் மகிழ்ச்சி என்ற சொல்லை அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.

இயல்பாகவும், சிரித்த முகத்தோடும் இருப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மனிதர்களின் புன்னகையை ஆர்வத்தோடு ரசிப்பேன்.

என்னிடம் அதிகமாக இருப்பது அன்பு, துடுக்குத்தனம், வேகம், தைரியம், சிக்கல்களை எதிர்கொள்ளும் பக்குவம், ஒருவிதமான தனிமை.

எனது உணர்வுகளை மறைத்து வைத்தும் பழக்கம் என்னிடமில்லை. முகத்திற்கு நேராக நினைப்பதை சொல்லிவிடுவேன். இந்தப் பழக்கத்தினால் நான் பெற்றதும் அதிகம் இழந்ததும் அதிகம்.

அதிகமாக பேசுவேன். தெரியாது முடியாது என்ற சொற்களை மிகவும் சொற்பமாகவே பாவிப்பேன். தொட்டதெல்லாம் வெற்றிதான் என்ற நம்பிக்கையில் ஆரம்பிப்பது தோல்வியில் முடிந்தாலும் துவண்டு போகமாட்டேன்.

புதிய விடயங்களை அறியவேண்டும் என்பதில் ஆவல் அதிகம். ஆளுமை கொண்டவர்கள் என்னை ஆக்கிரமிப்பார்கள். பேச்சில் தெரியும் ஆளுமை அவர்களது செயலில் இல்லாதபோது ஏமாற்றம் அடைவதும் உண்டு.
 
வாழ்க்கை என்பது லேசான விடயமல்ல. ஆங்காங்கே இடர்களை சந்தித்தே தீரவேண்டும். அதற்காக கசப்பான விமர்சனங்களுக்குப் பயந்து எனது விருப்பத்திற்கு எதிராகவோ மற்றவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காகவோ எந்த காரியத்தையும் செய்வதில்லை. எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காத எதையும் நான் தொடர்வதுமில்லை.

என்னை பாராட்டும்போதும், தட்டிக்கொடுக்கும் போதும், உண்மையான அன்பை உணரும் போதும் மேலும் உற்சாகமடைவேன். இதைச் செய்தால் அது நடக்கும் அதைச் செய்தால் இது நடக்கும் என்று நச்சரிக்கும் ''அவன்''களையும் ''அவள்''களையும் விட்டு முடிந்தளவு விலகி நிற்பேன்.

எனது அனுபவங்களின் ஊடாக நான் அறிந்தவற்றை நான் உணர்ந்தவற்றை நான் எழுத மறந்தவற்றை மற்றயவர்களின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும் போது அவற்றை மிகவும் விரும்பிப் படிப்பேன்.

என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களது அன்பு என்னை அழவைக்கும். என்னை நோகடித்து அழவைத்தவர்களைக்கூட இவர்களது அன்பு மன்னித்து மறக்க வைத்துவிடும்.

என்னையும், எனது ஆர்வங்களையும், எனது திறமைகளையும், எனது குறைகளையும் நான் ஆழமாக நேசிக்கின்றேன். எனது ஊக்கத்திற்கும் விருப்பத்திற்கும் அனுசரணையாகவும் ஆதாரமாகவும் இருப்பவர்களை தொடர்ந்து சந்திக்கவேண்டும் என்பது எனது அவா. இறைவனின் குணங்களை கொண்ட மனிதர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்களைத் தேடுவதும்  தேடல்களில் முக்கியமானதுதானே.

எனது துன்பங்களை நெருங்கியவர்களுடன்கூட பகிர்ந்து கொள்வதில் நாட்டமில்லை. அதற்கான காரணங்களில் ஒன்று அவர்களது மனதை வேதனைப்படுத்தக்கூடாது மற்றயது யாருடைய அனுதாபமும் சுத்தமாகப் பிடிக்காது.

பொய்யான வாழ்க்கையை வலியுடன் வாழ்ந்து வாழ்வை தொலைக்கின்ற பெண்ணல்ல இவள். ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த உலகத்தின்மீது அதீத நம்பிக்கை வைத்து எனது வாழ்க்கைப் பயணத்தை விரும்பிப் பயணிக்கின்றேன்.

ஆர்வங்களும் ஆசைகளும் பல தடவைகள் என்னை ஏமாற்றியதுமுண்டு அதில் பல அனுபங்களைக் கற்றதுமுண்டு. ஆனாலும் அன்பு என்ற அழகிய உணர்வின் அத்திவாரம் என்றுமே ஆட்டம் கண்டதில்லை. என்னைச் சூழ்ந்திருக்கும் உறவுகளின் அன்பு அழகானது என்பதை நான் மீண்டும் மீண்டும் காண்கின்றேன்.

எனக்குள்ளும் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டுமென்பது அவசியமில்லை ஆனால் முடிந்தளவு சொல்வதெல்லாம் உண்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக்கொள்வேன்.

என்னைப்பற்றி இதுவரை எழுதியது போதும் என்றே நினைக்கின்றேன். மற்றயவற்றை தொடரப்போகும் என் எழுத்துக்களில் இருந்து நீங்களே அனுமானித்துக் கொள்வீர்கள்
என்றும் அன்புடன்
சௌந்தரி

1 comment:

சஞ்சயன் said...

என்னையும், எனது ஆர்வங்களையும், எனது திறமைகளையும், எனது குறைகளையும் நான் ஆழமாக நேசிக்கின்றேன். எனது ஊக்கத்திற்கும் விருப்பத்திற்கும் அனுசரணையாகவும் ஆதாரமாகவும் இருப்பவர்களை தொடர்ந்து சந்திக்கவேண்டும் என்பது எனது அவா.

”உன்னையே நீ அறிவாய்” என்னும் பிரபல்யமான வாக்கியத்தினுள் மறைந்திருக்கும் கருத்தை மேல் உள்ள எழுத்துக்களும் இந்தப் பதிவின் சில பகுதிகளும் பிரதிபலிக்கின்றன.

”இறைவனின் குணங்களை கொண்ட மனிதர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்களைத் தேடுவதும் தேடல்களில் முக்கியமானதுதானே”

என்னும் வார்த்தைகளை உணர்ந்து அனுபவித்திருப்பதால் அவ் வார்த்தைகளின் புரிகிறது

நன்றி

Post a Comment