Wednesday, March 2, 2011

கருத்துச் சுதந்திரம்

கடந்த வாரம் கருத்துச் சுதந்திரம் எது வரை என்ற தலைப்பின் கீழ் உறவுகளுடன் இணைந்து மூன்று மணிநேரம் கலந்துரையாடினேன். அதன் சாராம்சத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

கருத்துச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது எண்ணத்தில் தோன்றுகின்ற சிந்தனைகளை சொல்வதற்கு எடுத்துக் கொள்ளும் உரிமை என்று கூறியபோது இல்லை எண்ணத்தில் தோன்றும் அனைத்தையும் சொல்வது கருத்துச் சுதந்திரமாகாது, சொன்னதோடு மட்டும் நிற்காமல் சொல்வதை சரியென்று நியாயப்படுத்துகின்ற போக்கும் எம்மில் பலருக்குண்டு என்றவாறே ஆரம்பிக்கப்பட்டது எமது கலந்துரையாடல்.



எந்தவித இடையூறுகளும் அச்சமுமின்றி கருத்தை வெளியிடுவதற்கு கிடைக்கின்ற சுதந்திரமே கருத்துச் சுதந்திரம் ஆகும். கருத்தை வெளியிடுவதற்கு எத்தனையோ விதமான தளங்கள் இருக்கின்றன. பேச்சு எழுத்து கலை போன்ற சில வடிவங்களும் அவற்றில் அடங்கும்.

தகவல்கள் செய்திவடிவில் கூறப்படுகின்ற போது அவற்றிற்குள் ஒளிந்திருக்கும் பல விடயங்களை அறிந்து கொள்ள கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம். பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அலசல் ஓர் உண்மையை நோக்கிய தேடலாக அமையும்.

மனிதர்கள் பல விதமானவர்கள் அவர்களது விருப்பு வெறுப்புகளின் தளங்கள் வேறுவேறானவையாக இருக்கும். அவர்களது சிந்தனைகள் நம்பிக்கைகள் வாழ்க்கை முறைகள் வேறுபட்டவையாக இருக்கும். அவர்களது பார்வைகளும் அதன் விளைவாக வெளிப்படும் கருத்துக்களும் வேறுபட்டவையாகவே இருக்கும்.

ஒரு கலந்துரையாடல் நடக்கும்போது அங்கே மாற்றுக் கருத்துக்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை சொல்வார்கள். கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். எல்லோரும் ஒரே கருத்தை தெரிவித்திருந்தார்கள் என்றால் ஏகமனதாக முடிவெடுக்கப்படும். எதிர்க் கருத்தைக் கூறியவர்களும் முடிவான முடிவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு அக்கருத்தில் ஒப்புதல் இல்லை என்றாலும் பொது நலன் கருதியோ அல்லது குழுநலன் கருதியோ அம்முடிவிற்கு உடன்படுவார்கள். இது ஆரோக்கியமான கருத்துப்பகிர்வில் நடைபெறுவது.


ஆனால் நம்மவர்களது கருத்துப் பகிர்வுகளில், கலந்துரையாடல்களில் முடிவு வேறுவிதமாக இருக்கும்.

எதிர்க்கருத்துக் கூறியவர்கள் அக்குழுவிலிருந்து வெளியேறி வேறோர் குழுவை அமைத்துக் கொள்வார்கள் அல்லது அக்குழுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள். இதற்கான காரணங்களாக பதவியாசை, புகழாசை, பொருளாசை,தன்மானப்பிரச்சனை என்பனவற்றைக் கூறலாம்.

ஆரோக்கியமான பயனுள்ள பல விடயங்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன்வரவேண்டும். எவருடைய அச்சுறுத்தலும் குறுக்கீடும் இல்லாமல் அவற்றை வெளியிடுவதற்கு உரிமைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அறிவதற்கும் கேட்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் பலர் காத்திருக்கின்றனர்.

ஒருவரது கருத்துக்கு மறுப்பாக அல்லது எதிராக இன்னொருவர் கருத்தை முன்வைத்தால் அவற்றை முழுமையாக கிரகித்து மறுபரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒருவரிடம் போதியளவு பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருக்கவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. அவற்றை வெளிப்படுத்துகின்றபோது அவர்களுக்கு சில கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன.

மற்றயவர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் மதிப்புக்கு கொடுத்து சமூகம், தேசம் போன்றவற்றின் நலன்களுக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனிமனிதனது அந்தரங்கங்களை அம்பலப்படுத்துவது, மானபங்கப்படுத்துவது, அமைதியைக் குலைப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.


ஆனால் எம்மில் பலர் தமது கருத்தை எதிர்ப்பவர்களை சும்மா விடமாட்டார்கள். உடனடியாக அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து எதிர்கருத்துக் கூறியவர்களை வசைபாடுவார்கள். வன்முறையில் ஈடுபட்டு ஒருவரையொருவர் துன்புறுத்தி காயப்படுத்தி நிரந்தர பகையாளியாக்கி விடுவார்கள். இவர்கள் துணிவாக நின்று எதிராளியின் கருத்தோடு மோதும் பக்குவத்தை வளர்க்காமல் கருத்தைக் கூறியவர்களுடன் மோதும் பலத்தைத்தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

அதேவேளை எதை எப்படி யார் செய்தாலும் பார்த்துக் கொண்டு இருப்பது என்பதும் சரியல்ல. அது கோழைத்தனம். பகுத்தறிவைப் பாவித்து சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்துச் சொல்லவேணடும்.

சில நாடுகளில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஏதாவது பேசிவிட்டால் எதிர் கருத்துக் கூறியவர் மரணத்தையும் தழுவநேரிடும். ஆதலால் கருத்துக்களை கூறும்போது இடம் பொருள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஐனநாயக தேர்தல் நடைபெறுகின்ற நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்று கூறிவிடமுடியாது. அந்தத் தேர்தல் முறையானது கருத்துச் சுதந்திர மற்றும் அனைத்து சுதந்திரங்களுக்கான மறுப்புக்களை மறைப்பதற்காக தேர்தல் நடக்கின்ற முறையை கவசமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகள் அதற்கான சிறந்த உதாரணமாக கூறலாம்.

நான் விரும்பிய கருத்தைச் சொல்வதற்கு எனக்கு பூரண உரிமை இருக்கின்றது என்பதற்காக சமயோசிதமற்று எழுந்தமானமாக விளக்கமற்று ஒருவரது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்துகின்றபோது எதிராளிகளை அதிகமாக சம்பாதித்துக் கொள்கின்றோம். தெளிவான ஆதாரங்களின்றி உண்மைத் தன்மைக்கு புறம்பாக சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் விமர்சிக்கக்கூடாது.

முக்கியமாக பக்கச்சார்பின்றி நடுநிலமையில் கருத்துக்களை முன்வைப்பவர்களை எமது கருத்துக்கு ஒத்துவராத ஒரு காரணத்துக்காக எதிர் விமர்சனங்களை கொட்டித்தீர்த்தால் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமது தொடர்ச்சியான இருத்தலுக்காகவும் எமது எதிராளிகளை நாடி செல்வதற்கு வழிவகுக்கின்றோம்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை திசை திருப்புவர்கள் மக்களது உணர்வுகளை தட்டும் வகையில் அவர்களை சுலபமாக நம்பவைக்கும் வகையில் விடயங்களை தெரிவு செய்வார்கள். உதாரணமாக தாய்நிலம், வர்க்கபேதம், மதம் போன்ற விடயங்களை கையாண்டு கேட்பவர்களை மூளைச் சலவைக்கு உட்படுத்தி தாம் நினைப்பதை அவர்களது எண்ணங்களில் திணித்து விடுவார்கள்.

அதன்பின்பு தாம் நினைத்தபடி அவர்களை ஆட்டிக்கொண்டிருப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களும் கட்டுண்டிருப்பவர்களும் தாமாக விழித்துக் கொள்ளும் வரை கருத்துப்பகிர்வு என்ற போர்வையில் அவர்களை பாவித்துக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் மூலமாக தாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள்.



மனிதர்கள் சகமனிதர்களை அடக்குவதிலும் அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கவுமே விரும்புவர். தமது கருத்துக்கு எதிராக எழும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் அவர்களுக்கு கிடையாது. அதனால் மாற்றுக் கருத்துக்களை தந்திரமாக அடக்குவதற்கான வழிமுறைகளையே அவர்கள் தேடுவார்கள்.

புலம்பெயர் நாடுகளில் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இன்னொருவரை மானபங்கப்படுத்துதல் துன்புறுத்துதல் அடக்குமுறைக்கு உள்ளாக்குதல் போன்றவற்றுக்கு சட்டத்தின் உதவியை அனைவரும் சுலபமாக நாடலாம். பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரத்தை தட்டிக்கேட்க இந்த நாடுகளிலுள்ள சட்டங்கள் ஒருபோதும் பின்னிற்பதில்லை.

சமூகத்திற்குள் பிளவுகளை தூண்டும் விதமாகவும் மற்றவர்கள் மீது திணிக்கும் விதமாகவும் தமது கருத்துக்களை விதைப்பவர்கள் எமது சமூகத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் யாரும் தமது நேரத்தையோ பணத்தையோ சட்ட வல்லுனர்களோடு செலவளிக்க தயாரக இல்லை என்பதே காரணம்.



கருத்து திணிப்பென்பது குடும்பத்திற்குள்ளேயே அன்பென்ற போர்வையில் ஆரம்பமாகின்றது. அதே போல் கிடைக்கின்ற சுதந்திரத்தை முறையாக பாவிக்காமலும் கண்ணியமாக கையாளாமலும் கோட்டை விடுவதும் நிகழ்கின்றது.

கருத்தை கூறிவிட்டு கருத்தில் உள்ள நியாயத்தன்மையை கேட்பவர்களோ பயன்படுத்துபவர்களோ தீர்மானிக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

கேட்பவரது சுதந்திரத்தைப் பறித்து தனது கருத்தை நிலைநிறுத்த முனைவது திணிப்பாகும். கருத்து சுதந்திரம் என்பது எழுதுபவருக்கு அல்லது பேசுபவருக்கு மட்டுமல்ல அதைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

சிலருக்கு இடம் பொருள் ஏவல் பார்த்து கருத்துக்களை முன்வைக்கும் பழக்கம் கிடையாது மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் நினைத்தவற்றை நினைத்தவுடன் பேசுகின்றவர்களுக்கு எதிரிகள் அதிகம். நெளிந்து வளைந்து குழைந்து மற்றவர்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைப்பவர்களைத்தான் இன்று பலருக்கும் பிடிக்கும்.

எப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். இரண்டு பேரும் வேண்டியவர்கள் என்ற நிலை ஏற்படும் வேளையில்கூட கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பதென்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்.
ஒரு நிகழ்வை அல்லது ஒரு தகவலை அடிப்படையாக வைத்து வெளிப்படையாக தெரிகின்றவற்றை மட்டும் கணக்கிலெடுத்து ஓர் உணர்வு வேகத்தில் கருத்தைக் கூறுவதென்பது ஒரு சாதாரண பார்வையாகும் அல்லது பாமரப் பார்வையாகும்.

அந்த நிகழ்வு எதனால் நிகழ்ந்தது அதன் பின்னணி என்ன நடந்த விதம் எப்படி அதன் தொடக்கம் என்ன இவற்றிற்கு தீர்வு என்ன மீண்டும் இந்நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் என்ன என்ற வகையில் ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமான பார்வையாகும்.

சில சம்பவங்கள் பேசப்படுகின்றபோது முன்வைக்கப்டும் கருத்துக்கள் சிலருக்கு கசப்பாகவும் சிலருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் இருக்கும். ஒரு காலத்தில் சரியென்று நம்பியவை கால மாற்றத்தில் மாற்றமடைந்து மதிப்பீடுகளிற்கு ஏற்றவாறு உருமாற்றங்களை உள்வாங்கி வேறுபடும் நிலையும் உண்டு. ஆதலால் ஆரோக்கியமான கருத்துக்களை வேறுபாடுகள் மறந்து எப்போதும் வரவேற்கவேண்டும். அவற்றை மீள்பார்வைக்கு உட்படுத்தி சேர்த்துக் கொள்ளவேண்டும்.

எதிர்க்கருத்துக்கள் என்றாலென்ன எதிர்விமர்சனங்கள் என்றாலென்ன அவை சொல்லப்பட்ட கருத்துக்கள் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும் கருத்துக்கள் சொல்பவரைப் பற்றியதாக இருத்தல் அநாகரீகமான செய்கையாகும். எமது கருத்துக்களை வெளியிடும்போது கண்ணியம் காக்கும் நாகரீகத்தை பழகிக்கொள்ளவேண்டும்.

வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து அவை ஆராயப்பட்டு எதிர்க்கருத்துக்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்து மறுபரிசீலனை செய்து முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் அவை சிறந்த முடிவாக அமையும்.


சமூகத்தின் தேசத்தின் முன்னேற்றத்திற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியமானது. இவற்றினால்தான் ஆரோக்கியமான திருத்தங்களும் மாற்றங்களும் சாத்தியமாகின்றன.

கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை. அந்த உரிமை மீறப்படும்போது கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்ற போது அவன் அடிமையாக்கப்படுகின்றான்.

1 comment:

BOOPATHY said...

வாழ்க்கை என்பது லேசான விடயமல்ல. ஆங்காங்கே இடர்களை சந்தித்தே தீரவேண்டும். அதற்காக கசப்பான விமர்சனங்களுக்குப் பயந்து எனது விருப்பத்திற்கு எதிராகவோ மற்றவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காகவோ எந்த காரியத்தையும் செய்வதில்லை

Post a Comment