Sunday, August 14, 2011

சின்ன சின்ன ஆசை


ஆசை இல்லாமல் வாழ்க்கையில்லை. சின்ன சின்ன ஆசைகளோ பெரிய பெரிய ஆசைகளோ ஆசை இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இல்லை. நிறைவேறிய ஆசைகள் நிறைவேறாத ஆசைகள் என்று பல விதமான ஆசைகளை தமக்குள் மறைத்தும் மறையாமலும் வைத்திருக்கின்றார்கள் மனிதர்கள். அந்தந்த வயசில் அவ்வப்போது எழும் ஆசைகளை மனதிற்குள் பூட்டி வைக்காது அவற்றை அனுபவிக்க முயற்சியெடுப்பதே சிறந்தது. முயற்சியில்லாத எதுவுமே பலனளிக்காது. 

இவர் இப்படியெல்லாம் ஆசைப்படுகின்றார் அவர் தகுதிக்குமீறி ஆசைப்படுகின்றார் என்று மற்றவர்களைப் பார்த்துக் குறை கூறுகின்றவர்கள்கூட சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அவற்றிற்காக ஆசைப்படுவார்கள். ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை. ஆசை என்பது இல்லாது போனால்தான் அவன் சவத்திற்கு ஒப்பாவான்

ஒரு மனிதன் சட்டத்தின், சமயத்தின், சமூகத்தின் வரையறைக்குட்பட்டு தனது தேவைகளிற்காக ஆசைப்படும்போதும் புதியவற்றை அறிந்து கொள்வதற்குரிய முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போதும்தான்; பலவிதமான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றான். அனுபவங்கள்மூலம்தான் மனிதன் தன்னை வளர்த்துக்கொள்கின்றான்.

ஆசைகள் நியாயமானவையாக இருக்குமென்றால் அவை நிறைவேறுமென்றும் நியாயமற்ற ஆசைகள் குற்றங்களிற்கும் துன்பங்களிற்குமான அஸ்திவாரமென்றும் கூறப்படுகின்றது. மனித மனங்கள் மலர ஆசைப்படுவது நியாயமானதென்றும் ஒருவரது ஆசைகள் மற்றயவர்களின் மனங்களை துன்பப்படுத்தும் என்றால் அவை நியாயமற்றவை என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

ஆசைக்கென்று ஓர் அளவுகோல் இருக்கின்றதா? இருந்தால் அந்த அளவுகோல் எல்லோருக்கும் பொதுவானதாக அமைகின்றதா? இல்லை ஆளாளுக்கு வேறுபடுகின்றதா? வேறுபடுகின்றதென்றால் அந்த அளவுகோல் எதற்காக? இவையெல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.  


இதோ ஆசைபற்றி மு மேத்தாவின் கவிதையொன்று


எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன
இதயச் சோலையிலே - இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன
எந்தன் வாழ்வினிலே
எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன
எனது கண்களிலே - அதில்
எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன
எந்தன் வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன
பாழும் மனதினிலே - அதில்
ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல
உலக வாழ்க்கையிலே
கொள்கையும் நேர்மையும் உண்மையும்
பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே அதில்
கல்லால் அடித்த கனிபோல் உதிர்ந்தவை
கணக்கில வாழ்க்கையிலே

கோடுகள் போட்டு அதற்குள் வாழ்க்கையை வாழ நினைக்கின்றோம் ஆனால் அப்படியே வாழமுடிகின்றதா. இல்லையே! கல்லால் அடித்த கனிபோல் அல்லவா  உதிர்ந்து போகின்றது. அதற்காக சூடுகண்; பூனைபோல் அடுப்பங்கரைப்பக்கம் எட்டிப் பார்க்காமலா விடுகின்றோம். அதுவும் இல்லையே! ஆகவே ஆனது ஆகட்டும் நீ ஆசைப்படு என்பது சரிபோல் தோன்றுகின்றது.

வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்படுவதற்கான மூலகாரணம் ஆசை. மண்ணென்றாலென்ன பெண்ணென்றால் என்ன பொன்னென்றாலென்ன எதற்கும் ஆசைதானே அடிப்படைக் காரணம். ஆனால் ஆசை பேராசையாகின்றபோது அங்கே சீரழிவுதான் என்பதை இந்தக் கவிதை கூறும்.


பேராசை


ஆசைப்படு ஆபத்தில்லை
ஆசை பேராசையானால்;
அழிவுதான் உலகநியதி 
அரசியல்வாதியின் பேராசை
நாட்டு மக்களைப் பாதிக்கும்
ஆக்கிரமிப்பாளனின் பேராசை
நாடு நகரங்களைப் பாதிக்கும்
மதங்களின் பேராசை
மரணத்தைக் கொடுக்கும்
மனங்களின் பேராசை
மகிழ்ச்;சியைக் கெடுக்கும்
தேவைக்குப் போராடு;
நீ போற்றப்படுவாய்
காலமறிந்து கைகொடு
நீ வாழ்த்தப்படுவாய்
தகுதிக்குள் ஆசைப்படு
தரமாக வாழ்வாய்;
ஆசைப்படு
அனைத்துக்கும் ஆசைப்படு
அதுகூடத் தவறில்லை
ஆனால் அடுத்தவன்
சொத்துக்கு ஆசைப்பட்டால்
அது முறையில்லை
பேராசை என்பது பேரழிவு
வராலாறு கூறும் பாடமிது
கற்றுக் கொள்
காலம் கடந்தாவது கற்றுக்கொள்

சௌந்தரி

சின்னச்சின்ன ஆசைகள் எத்தனையோ இருக்கும். பகிர்;ந்து கொள்ளக்கூடியவை மிக சொற்பமானவையே


தாய்மடியில் தலைவைத்து கண்ணுறங்க ஆசை
தைபிறந்தால் வழிபிறக்கும் காத்திருக்க ஆசை
பெற்றவர்கள் பெருமைதனை பேசிவர ஆசை
பேராசைப் பெரும்படியை தாண்டிவர ஆசை
ஆர்ப்பாட்டமில்லாத அன்பு கொள்ள ஆசை
போராட்டமில்லாத வாழ்வுகாண ஆசை
உலகத்தின் அமைதிக்கு தூது செல்ல ஆசை
ஈழத்தில் இளைப்பாறி சேவை செய்ய ஆசை
தலைவரண்ணா தங்கையென்று உறவு கொள்ள ஆசை
தலைதூக்கும் பாம்புகளை தலையடிக்க ஆசை
பச்சிளம் குழந்தையொன்றை தத்தெடுக்க ஆசை
இளம்பிறையின் சிரிப்பதனை ரசித்திருக்க ஆசை
சேவலைப்போல் காலையிலே குரல் கொடுக்க ஆசை
காவலாக வாசலிலே காத்துநிற்க ஆசை
கந்தனைப்போல் சூரனை வதம் செய்ய ஆசை
சந்திரனின் குளிர்மையை கடன் வாங்க ஆசை
அமைதிக்கு பெயர்போன பெண்ணாக ஆசை
ஆசானாய் துணிந்;துநின்று அறிவுறுத்த ஆசை
வம்பளக்கும் மனிதர்களை மாட்டிவிட ஆசை
சிங்களத்தின் முகத்திரையை கிழித்துவிட ஆசை
புலத்தினிலே வன்முறையை ஒழித்துவிட ஆசை
காதலோடு கைகோர்த்து கதைபேச ஆசை
வள்ளியம்மை மணவாளன் துதிபாட ஆசை
தௌ;ளுதமிழ் தேன்மொழியில் கவிபாட ஆசை
பள்ளிசென்று மீண்டும் படித்துவர ஆசை
உள்ளமதில் உள்ளதை உரத்துக்கூற ஆசை
வன்சொல் தவிர்த்து வதம்செய்ய ஆசை
இன்சொல் இணைத்து மகிழ்விக்க ஆசை
நானாக நானென்றும் வாழ்ந்துவிட ஆசை
பேனாவைப் பிடித்து புரட்சி செய்ய ஆசை
அளவில்லா ஆசைகள் அகத்திலும் புறத்திலும்
அத்தனையும் இறப்பதற்குள் அனுபவிக்க ஆசை
இறந்தாலும் மீண்டும் பிறப்பதற்கும் ஆசை
நிறைவேறா ஆசைகளைத் தொடர்வதற்கும் ஆசை

சௌந்;தரி

ஆசைகளற்ற மனிதர்கள் யார்.  அவர் திட்டுவார் இவர் கோவிப்பார் அவருக்காக இவருக்காக என்று துளிர்விடும் சின்ன சின்ன ஆசைகளை ஏக்கங்களைக்கூட தியாகம் என்ற பெயரிலும் ஏமாற்றம் என்ற பெயரிலும் நிறைவேற்றாது கருக்கிவிடுகின்றோம்.

இதோ தனது தேவைகளை தான் விரும்பியபடியே நிறைவேற்ற ஓர் நாள் வராமலா போய்விடும் என்று காத்திருக்கின்றது ஓர் குரல்

அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களைத் தவித்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன்
வழிபட்டேன்
கல்யாணம்கூட கட்டிக் கொண்டேன்
காத்திருக்கின்றேன்
என் முறை வருமென்று

இது எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா? ஆசையை அடக்கிக் கொள்ளும் முறை எமது சமூகத்தில் அதிகம். சிறிதும் பெரிதுமான எத்தனை ஆசைகளை நாம் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கின்றோம். எமது ஆசைகளை சாகடித்துவிட்டு அப்பா அம்மா அக்கா அத்தான் என்று மற்றவர்களுக்காக வாழுகின்ற மனிதர்கள் எத்தனையெத்தனை.